வெள்ளி, 18 செப்டம்பர், 2009

காமத்தின் படுகை


கனவின் பிரவாகம் என்றறியா
நதிஉடல்
அதிகாலையின் விழியில் சிவப்பாகிறது
சிறுசுழிப்பில் நதிகொணரும்
நுரைகளை
அவள் என்மீதிருந்து அள்ளுகிறாள்
விடாய் தீர்க்க்கும் உடல் அவள்
பருக வேண்டி இன்னும் சில்லிடுகிறது
காமத்தின் படுகையில் ஜெல்லிமீன்
கூட்டம்
மொய்க்கும் குறுகுறுப்பை
மயிர்க்கால்களில் உணர
நதிவிளிம்பில் நான்கு குமிழிகள்
உடைகின்றன
காலாகாலத்திற்கும் எஞ்சிய கேள்விகள்
முடிச்சுகள் சூட்சமங்கள் அதனதன்
புரிதலில்
ரகஸ்யமற்று ருசித்து ருசியேறிய
உடல் பரிமாற அவள் உண்கிறாள்
நதியின் ஆதிவாசல் கண்டு
அவள் யோனி பொருத்துகையில்
நியோண்டர்தால் சிவனின்
சடை நெகிழ்ந்து அவிழ்கிறது

புதன், 1 ஜூலை, 2009

அறைக் கூடு (அ) பறவை வாழுமிடம்


இருளின் திசையஞ்சி கூடடையும் பறவை
சடசடத்து உடைக்கிறது அறையின் நிசப்தத்தை
வெண்தாளின் சிதறிய எழுத்துக்களில்
களைப்புற்ற மெல்லிறகு அமர்கிறது
வெப்பம் உறைந்த கல்அறைக்குள்
விரியும்
அப்பறவையின் சுதந்திரம் அபரிமிதமானது
மேலும் என் பெயர்சொல்லி அழைக்க
கற்றுக்கொண்ட பின்பு
அப்பறவைக்கான
தானியங்கள் சேமிப்பதை அவசியமென உணர்கிறேன்
இம் மாலைக்கானவற்றைக் கொத்தித் தீர்ந்ததும்
அறை மூலையில் குவிந்த
சொற்கூட்டங்களை கிளறுகிறது
எவரும் கற்பனிக்காத படிமமொன்றை
அதன் வால்நுனியில் கட்டிவிடுகிறேன்
தொன்ம நினைவொன்றில் சிக்கி
மேற்கே நீரிலமிழும் அந்தியை நோக்கி
தூதென சுமந்து வெளியேறுகிறது
அக்கணமே
தாளில் கிடந்த மெல்லிறகு
அறையை மூடுகிறது மென்கருமை பேருருவாகி.

வியாழன், 11 ஜூன், 2009

பாலைவனத் தனியன்விரிந்த கடல்
மணலான கதையின் நாயகன் அவன்
கோடையின் விளைவாக உமிழும்
வெயிலின் உக்ரத்தை உறிஞ்சுகிறான்
எல்லாத் திசையிலும் வளர்ந்து விரியும்
பாலைப் பரப்பின் மீது
உலர்ந்த நாசி நீர்ச்சுவடுகளை நுகர்ந்து தோற்கிறது
நிசப்தத்தைக் காட்டிலும் குறைந்த ஒலியில்
நினைவிற்குள்ளாக நுழைந்து சுவைக்கிறான்
முன்பறிந்த பெண்ணின்
பழுத்த உதடுகளை
பேரிட்சையின் தித்திப்பானது
தாகத்தை மேலும் கூட்டுகிறது
பாலைவனத் தனியன் நிலவழிந்த இரவில்
ஸர்ப்பத்தின் வாலை மிதித்துவிட்டான்
ஸர்ப்பமோ முன்காலத்தில் நதியாயிருந்தது
ஸர்ப்பமாகிவிட்ட நதியின் ரேகைகள் பதிந்த பாதத்தால்
மணல்வெளியெங்கும் எழுதித் திரிகிறான்
அதன் உடல்மொழியை
தனிமையின் ஊதாநிழல் கவிந்துவிட்ட ஆன்மாவில்
அவன் காதலி
பருக யத்தனிக்காத கடல்அலைகளென ஆர்ப்பரிக்கிறாள்
பிரிந்து சென்றவனின் பிம்பத்தை அவள்
தன் ஆடியில் ஒளித்து வைத்திருக்கிறாள்
ஆடை மாற்றும் சாக்கில்
தினமும் அதை சல்லாபிக்கிறாள்
வேட்கை பீறிடும் உடல் ஆடியின்
ரஸவெளியில் கரைகிறது
நெளியும் உருவிலிருந்து தோலுரித்து வெளியேறுகிறது
நீர் ஸர்ப்பம்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிலாக்கணங்கள் நடுங்கும் வெளி


நிலவின்மையின் முழுமையை உணரும் இரவில்
துர்கனவின் சல்லடையினூடே கசிகிறது
பேராபத்து
கட்டிட வனத்தைச் சுற்றிலும்
பிலாக்கணங்கள் நடுங்கும் வெளியில்
ஒப்பற்ற உன் வருகையின்
திருநிமிடங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
உலர்வானமாய் வெறித்துவிட்டன நம்பிக்கைகள்
இருள் வரிந்த கல்சுவர்களுள்
மௌனமென்று அறிய ஏதுமில்லை
ஊளையிடும் புகையும்
பெருவெடிப்பின் ஓசையுமென மாறும் காட்சிகளால்
வியர்க்கும் உள்ளங்கைகளை மறைத்துக் கொள்கிறேன்
காத்திருப்பின் யுகாந்திர நீட்சிக்குப் பின்
சூர்ய கோளத்தின் ஒரு துளியென எரிந்தணைந்த
உனதுடலைத் தருகின்றனர்
ஆயிரம்முறைகள் வாழநேர்ந்த இரவு உதிரும்போது
விடிகாலைக் கடலின் பாதமுணரும் அலைகள்
உன்னைப் போலவே திரும்பி விட்டன
மீளமுடியாமைக்கு

வியாழன், 4 டிசம்பர், 2008

அவளின் கனவுரு


உயிர்ப் புள்ளியினின்று நீண்ட கோடுகள்
வளர்த்த ஓவியக் கானகத்துள்
நானென்பது சிறைபட அவள் சிரிக்கிறாள்
இடம் வலமாய்க் கடக்கும் அவளின் கனவுரு
ஞாபகமேட்டின் உச்சியில்
எனக்கொரு சிலுவையை நிறுவியிருக்கிறது
திரண்ட மேகங்களுக்கிடையில் சாய்ந்த ஒளி
ஸ்பெக்ட்ரமின் ஏழு வண்ணங்களாய் அசைந்து
எழுதத் தூண்டிய அவளது நினைவுகள்
கூடவே
கவிதை கற்பனித்த கனவும்
திடுமென குவிந்த இரவின் பிடிக்குள்
கருப்பு வெள்ளையானதில்
இவ்வரிகளென சரிகிறது மிச்சப்பிரதி
.