ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

ஒற்றைப் புள்ளி


முடிவுறாத ஓவியத்தின்
அமைதியின்மை
இப் பெருங்கடலில்

பரமனின் விந்தினை ஏந்தும்
நிலப் பெண்ணின் யோனியாய்
தளும்பும் கடலின் மீது
சாத்தானின் போர்வையென
கவிழும் இரவில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கருநீல நிச்சலனம்

புறப்பட்ட இடத்திற்கும்
சேருமிடத்திற்கும்
சம தொலைவிலான நடுக்கடலில்
என் கலம்

தூர ஆழத்தில்
அசையும் நிலத் திட்டு
என் வருகை பற்றிய
உன் கனவுகளைச்
சூறையாடும் பேரலைகளை
அனுப்பி வைக்கிறது

இவ்விரவில்
கரையிலிருந்தபடியே நிமிர்ந்து பார்
நம் பார்வைக் கோடுகள்
வெட்டிக் கொள்ளும்
ஒற்றைப் புள்ளியாய்
மிதக்கிறது கடைசி நிலவு.



செவ்வாய், 23 செப்டம்பர், 2008

மனவோட்டத்தின் காட்சிப் படிமங்கள்


மனம் தன் வெளிகளில் சதா சித்திரங்களை வரைந்துகொண்டே இருக்கிறது. தான் காணும் உலகின் வெவ்வேறு தோற்றங்களையும்,சந்திக்கும் மனிதர்களையும் அவர்களுடனான உறவினையும் சித்திரங்களாக்கி சேகரித்துக் கொள்கிறது.அவ்வாறான சித்திரங்களையும்,அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் ஒருவரால் அழித்துவிட இயலுமா?தன் கடந்த கால நிகழ்வுகளையும்,ஞாபகப்பதிவுகளையும் முழுவதுமாக ஒதுக்கிவிட்டு வாழ்வது சாத்தியமா?
நீலம் (English: Three Colors: Blue, French: Trois couleurs: Bleu), புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குநர் கிறிஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் திரைப்பட வரிசையில் வந்த முதலாவது திரைப்படமாகும்.சாலை விபத்தொன்றில் தன் கணவனையும் சிறுவயது மகளையும் பறிகொடுக்கும் ஜூலி அத்துயரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. அவள் மனித வாழ்வின் இன்ப துன்பங்கள், பாசப் பிணைப்புகளிலிருந்து 'விடுதலை' அடைந்து 'மனக்கொலை' (Spiritual Suicide) செய்துகொள்ள விரும்புகிறாள். ஆனால் அவள் சென்று தங்கும் பாரிஸ் நகரத்தில் தெரிந்தவர்களும் புதிய அறிமுகங்களும் விரிக்கும் நேசவலைகள் அவளது வாழ்வை மீட்டெடுக்கின்றன.
கீஸ்லோவ்ஸ்கியின் திரைப்படங்கள் எதையும் உபதேசிப்பதில்லை.மாறாக அவை அவநம்பிக்கைக்கும்,அன்பின் வழியாக நிகழும் மனதின் மீள்நீட்சிக்கும் இடையில் ஊசலாடும் மனித வாழ்வினை தர்க்கரீதியாக முன்வைக்கின்றன.பெரும்பாலும் உளவியல் மற்றும் சமூகக் கோட்பாடுகளை தங்களின் உட்பொருளாக எடுத்துக்கொள்ளும் கீஸ்லோவ்ஸ்கியின் திரைப்படங்களிலேயே விமரிசகர்ளால் பெரிதும் பாராட்டப் பெற்றது 'நீலம்'.
1993ல் வெளியான இத்திரைப்படம் அன்பும் இசையும் நம் ஆன்மாவின் மீது செலுத்தும் தப்பவியலாத அழுத்தத்தையும்,தியாகம் மற்றும் சகமனிதர்களுடனான உணர்வுபிணைப்பினால் விளையும் முரண்பட்ட ஆனால் உண்மையான சந்தோஷத்தினையும் விவரிக்கின்றது.
விபத்தில் பிழைத்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஜூலி தற்கொலைக்கு முயன்று தோற்கிறாள்.தான் வாழும் இடமும்,சூழலும் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதால் எவரிடமும் சொல்லாமல் பாரிஸிற்கு செல்கிறாள்.தன்னைச் சுற்றியிருக்கும் உலகை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறாள்.குழந்தைகளற்ற அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்ந்தெடுத்து குடியேறுகிறாள்.தன்னை ஒருதலையாக காதலிப்பவனின் அன்பை மறுதலிக்கிறாள்.எனினும் வாழ்க்கை தன் விசித்திர வலைகளை மறுபடியும் பின்னத் தொடங்குகிறது.புகழ்பெற்ற இசையமைப்பாளனான அவள் கணவன் பாதியில் விட்டுச் சென்ற இசைக் கோர்வையினை முடித்து வைக்கும் பணியில் ஈடுபட நேர்கிறது.இசையும்,பிற மனிதர்களோடு உண்டாகும் அணுக்கமும் அவளைத் தனிமைகளிலிருந்து மீட்டெடுக்கின்றன.ஈரதிசை நோக்கி விதையிலிருந்து கிளர்ந்து வெளிக்கிளம்பும் வேர்நுனிகளைப் போல அவள் மனதில் அன்பு வளரத்துவங்குகிறது.
கீஸ்லோவ்ஸ்கி தன் கலை சார்ந்த தொழில்நுட்பத்தின் உச்சநிலையை இத்திரைப்படத்தின் மூலம் எட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.இறுதிக்காட்சியை நோக்கி முன்னகர்ந்து செல்லும் திரைக்கதை அமைப்போ அல்லது குறைந்தபட்சம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு பார்வையாளனை இட்டுச் செல்லும் சம்பவங்களோ கூட இன்றி இத்திரைப்படம் தான் எடுத்துக்கொண்ட ஆதார உணர்ச்சிப்பாட்டின் இழைகளினாலேயே தொகுக்கப் பட்டிருக்கிறது.அவ்வகையில் திரைக்கதையின் அமைப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கும் பிரதிவடிவங்களிலிருந்து விலகி மாறுபட்ட திரைக்கதை வடிவமைப்புகளிற்கான எண்ணற்ற கதவுகளை இத்திரைப்படம் திறந்திருக்கிறது எனலாம்.படத்தின் துவக்கத்தில் வரும் கார் விபத்திற்குள்ளாகும் காட்சியும் கூட வழக்கங்களிலிருந்து பெரிதும் வித்தியாசப்படுகிறது.விண்ணை நோக்கி எழும் நெருப்புப் பந்தோ,தெறிக்கும் இரத்தமோ இல்லை.மாறாக மிக தொலைவில் long shotல் நடந்து முடிகிறது.மிகப்பெரும் இவ்வுலகில் வாழ்வின் இயக்கங்களோடு ஒப்பிடுகையில் மரணம் மிகச்சிறியது எனும் கருத்து இக்காட்சியின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.தொடரும் காட்சிகளில் ஜூலியின் மனவோட்டங்களும்,உணர்ச்சிகளிலிருந்து விட்டு விடுதலையாகி வாழத் துடிக்கும் பிடிப்பற்ற நிலையும் காட்சி படிமங்களாக சித்தரிக்கப் படுகின்றன.பாரிஸில் தேநீர்க் கடையொன்றில் அமர்ந்திருக்கும் ஜூலி அற்புதமானவொரு இசை வாசிக்கப்படுவதை கேட்கிறாள்.அது தனக்கு மிகவும் பரிச்சயமான, தான் மட்டுமே அறிந்த இசை என்பது அவளது பாவனைகளிலிருந்து வெளிப்படுகின்றது.இசை வரும் திசை நோக்கி திரும்புகிறாள்.அங்கே சாலையோரம் நடைபாதையில் அமர்ந்தபடி ஒருவன் தன் குழல் வாத்தியத்தை இசைத்துக் கொண்டிருக்கிறான்.அவனருகே செல்லும் ஜூலி '' இந்த இசை உனக்கெப்படி தெரியும்?'' எனக் கேட்கிறாள்.அதற்கு அவன் ''நான் புதுப்புது இசைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறேன்.எனக்கு வாசிக்கப் பிடிக்கும்'' என்கிறான்.வெளிப்பார்வைக்கு இது சாதாரணவொரு காட்சியாகத் தோன்றினாலும்,அதன் உள்ளடக்கத்தில் மிக ஆழமான கருத்தினைக் கொண்டிருக்கிறது என்கிறார் கீஸ்லோவ்ஸ்கி.இது குறித்து அவர் அளித்த பேட்டியொன்றில் ''இசைக்குறிப்புகள் தனித்தனியாக சிதறிக்கிடக்கின்றன.அவை தங்களை இணைத்து வைக்கும் ஒரு மனிதனுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.எப்படி வெவ்வேறு விதமான இசைக்குறிப்புகளை வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்பின் அறிமுகமில்லாதவர்களாலும் கூட ஒன்று போலவே இணைக்கவும்,இசைக்கவும் முடியுமோ,அதுபோல தான் மனித உணர்வுகளும். நாடு,இன,மத எல்லைகள் கடந்து கண்ணீரும்,புன்னகையும் எல்லோராலும் ஒரே விதமாக உணரப்படுகின்றன'' என்கிறார்.
திரைப்படம் என்பது காட்சிப்படுத்துதலின் ஊடகம்.வசனங்களால் விவரிப்பதைக் காட்டிலும், காட்சிப்படுத்துதலின் மூலமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், கதைப் போக்கினையும் உணர்த்துவதே சிறந்த திரைப்படத்தின் அம்சம்.கீஸ்லோவ்ஸ்கி இதை நன்கு உணர்ந்திருக்கறார்.'நீலம்' திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவதில்லை.ஆனால் காட்சிப்படுத்துதலில் அவர் கையாளும் உத்திகளால், நம்மால் கதாபாத்திரங்களின் மனப்பிராந்தியத்திற்குள் எளிதில் நுழைந்து அவர்களை புரிந்து கொள்ள முடிகிறது.கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் 'முதன்மை கதாபாத்திரமான(protoganist)' ஜூலியின் உலகை வடிவமைப்பது மட்டுமின்றி தங்களவிலும் முழுமை பெற்றிருக்கின்றன.இது இத்திரைப்படம் உருவாக்கியிருக்கும் உலகின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவியிருக்கிறது,குறிப்பாக ஜூலியினுடைய தாயின் பாத்திரபடைப்பு.ஜூலி தான் எவ்வாறான உணர்வுநிலையை அடைய வேண்டுமென விரும்புகிறாளோ அவ்வாறானவொரு கதாபாத்திரமாக அவளின் தாய் சித்தரிக்கப் படுகிறாள்.அவளின் ஞாபக அடுக்குகள் சிதைந்து போயிருக்கின்றன.சுற்றி இயங்கும் உலகைப் பற்றிய பிரக்ஞையே இன்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெறித்துக் கொண்டிருக்கிறாள்.தன்னை சந்திக்க வரும் ஜூலியையே அவளால் நினைவுபடுத்திக் கொள்ள முடிவதில்லை.தன் சகோதரி என தவறாக அடையாளம் காண்கிறாள்.ஜூலி தன் கணவனும் மகளும் விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லும் பொழுது,உணர்ச்சிகள் ஏதுமற்ற வெறுமையான முகபாவத்துடன் திரும்பிக் கொள்கிறாள்.அதற்கு முற்றிலும் நேர்மாறானதாக அமைக்கப்பட்டிருக்கிறது,பாரிஸில் ஜூலியின் குடியிருப்பில் வசிக்கும் விலைமாதுவின்(call girl) பாத்திரபடைப்பு.ஒரு சமயம் ஜூலி அவளிடம் ''நீ எதற்காக இந்த தொழிலை செய்ய வேண்டும்?'' என்று கேட்பதற்கு அவள் ''ஏனென்றால் எனக்கு இது பிடித்திருக்கிறது'' என்கிறாள்.தொடர்ந்து ''யாருக்குதான் இது பிடிக்காது?'' என்ற கேள்வியையும் எழுப்புகிறாள்.ஒப்பிட்டுப் பார்க்கையில் இவ்விரு பாத்திரபடைப்புகளும் கொண்டிருக்கும் உணர்வுநிலைகளுக்கு இடையே தான் ஜூலியின் மனம் அலைக்கழிகிறது.
காட்சியின் ஒளி குன்றி மறைந்து திரை இருளாகி,பின் அடுத்த காட்சி ஒளிரத் துவங்கும் படத்தொகுப்பு முறையான 'fade out, fade in' பயன்படுத்தப்பட்ட விதமும்,அதனோடு சேர்ந்து வரும் பிண்ணனி இசையும் ஒருவித மயக்கநிலையை உண்டு பண்ணுகின்றன.ஜூலி தன் மகளுக்காக வாங்கி வைத்திருக்கும் மிட்டாயை மூடியிருக்கும் தாள்,வீட்டில் அலங்காரத்திற்காக தொங்கவிடப் பட்டிருக்கும் படிகக் கற்கள்,நீச்சல்குளம் என படம் முழுவதும் நீலநிறம் உறைந்தடர்ந்த,கடினமான சோகத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
1993ம் ஆண்டின் வெனிஸ் திரைப்பட விழாவில் 'நீலம்' சிறந்த திரைப்படம்,சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளைப் பெற்றது.நுட்பமான ஒளிப்பதிவும்,நெகிழ்ச்சியான இசையும்,தேர்ந்த இயக்கமும் இணைந்து இத்திரைப்படம் உருவாக்கியிருக்கும் உலகம் அதன் முப்பரிமாணத் தன்மைகளுடன் முழுமையடைந்த ஒன்றாக நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது.

திங்கள், 22 செப்டம்பர், 2008

கவிதை 2


ஒவ்வொரு பகிர்தலின் பின்னும்
துல்லியமாய்க் கேட்கின்றன
அரூப மனவொலிகள்
வாதை பீடித்த மனம் பிழிந்து
வழியும் நினைவில் பாலிக்கும்
வட்ட முகச் சாயல்
கனவில் மிதக்கும் அவ்வறையின்
இருளில் தேகம் நிரம்பிப்
பூக்கும் உன் வாசம்
முற்றுப் பெறவியலாத
நினைவுகளின் மென்சதையில் அழுந்தும்
தனிமையின் கூர்முனை
துளிர்க்கும் குருதி வழிந்துறைந்து
தோல் பரப்பில் மென்சோக
நீள்வரிகள்.

கவிதை 1


பகாப்பத முத்தமொன்றிலிருந்து
உன் உதடுகளைப்
பிரித்தெடுத்துப் போனாய்
கிழிந்த என் பாதி
முத்தத்தின் சிறகுகள் உறைந்து
அந்தரத்தில் மிதக்கும்
மழையற்ற ஒற்றை மேகமாகிறது
துக்கத்தின் குறியீடாய்
மேகப் படலுக்கு அப்பால்
மெலிந்த நிலவின் வெண்முகம்
நட்சத்திர விடைகள் வேண்டி
உலர்ந்த வானில்
ஓங்காரமிடும் கேள்விகளை எறிகிறேன்
நம்பும் படியே நீ
திரும்பி வந்து கொண்டிருப்பதாய்
அசரீரி என்றும் போலவே
இன்றையக் கனவிலும்