ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

ஒற்றைப் புள்ளி


முடிவுறாத ஓவியத்தின்
அமைதியின்மை
இப் பெருங்கடலில்

பரமனின் விந்தினை ஏந்தும்
நிலப் பெண்ணின் யோனியாய்
தளும்பும் கடலின் மீது
சாத்தானின் போர்வையென
கவிழும் இரவில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கருநீல நிச்சலனம்

புறப்பட்ட இடத்திற்கும்
சேருமிடத்திற்கும்
சம தொலைவிலான நடுக்கடலில்
என் கலம்

தூர ஆழத்தில்
அசையும் நிலத் திட்டு
என் வருகை பற்றிய
உன் கனவுகளைச்
சூறையாடும் பேரலைகளை
அனுப்பி வைக்கிறது

இவ்விரவில்
கரையிலிருந்தபடியே நிமிர்ந்து பார்
நம் பார்வைக் கோடுகள்
வெட்டிக் கொள்ளும்
ஒற்றைப் புள்ளியாய்
மிதக்கிறது கடைசி நிலவு.



2 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

பின்னூட்டத்தின் வழி வந்தேன். உங்கள் கவிதைகளை முன்பும் வாசித்திருக்கிறேன். உயிர்மையில் என்று நினைக்கிறேன்.

"கடலின் மீது
சாத்தானின் போர்வையென
கவிழும் இரவில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கருநீல நிச்சலனம்"

என்ற வரிகளை ஒரு காட்சியாகக் காணமுடிகிறது.

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து எனது வலைப்பூ பக்கம் வாருங்கள்..