ஞாயிறு, 19 அக்டோபர், 2008

இப்படிக்கு மூன்றாமவன்


பிரிவின் குளிர் நாவு உச்சரிக்கையில்
என் பாடலின் இறுதிவரி நடுங்குகிறது
றெக்கை முளைக்கும் உனது
அவநம்பிக்கையின் கண்ணாடித் தூசுகளால்
விழி நெய்த பருவங்களின்
மெல்லாடை கந்தலாகிறது
தாமதித்தது நியாயமற்றதெனினும் உன்
அர்ப்பணிப்பின் ரேகைகள்
என் தூரம் வரையில்
நீளவேயில்லை எந்நாளிலும்
மனமோய்ந்து
அடர்ந்த வார்த்தைக் கூட்டமாகிறேன்
என்னிலிருந்தே உருவுகிறாய் குறுவாளொன்றை
பின்னர் முன்னறியாத வரியொன்றிலிருந்து
உனது காதல் என்னிடம் சொல்கிறது
நான் மூன்றாமவனாகிவிட்டேன் என்பதை

புதன், 15 அக்டோபர், 2008

நிகு


பிற பெண்களைப் போலன்றி
உனதிரு தோள்களிலும் சிறகுகள் முளைத்ததன்
அளப்பரிய ஆனந்தத்தின் துணுக்கு
என் உதட்டோரங்களில்
உனதாடை ஜிகினாத் தூசிகளென மினுமினுத்தன
திராட்சைநிறச் செழுமையுடன் அடர்ந்திருந்த
இரவின் வெளிச்சமின்மையினூடாக
உன் உயிர்க் கலம் தளும்ப
விந்தாய் உருகினேன்
கற்பனை பழுதுபட்டு
எனது காமம் துவளுகையில்
பெருங்கருணை பாகங்களால் உணவளித்தாய்
தேவதைக் கதைகள் முடிவுறும் கணங்களை
அறியாமல் இருந்து விட்ட பின்
ஞாபகங்களைப் பின்னிழுக்கும் நிகழ்வுகளின் விசையில்
கைநீட்டி உனைத் தொட முயல்கிறேன்
கனவுகள் சூழ் உறக்கத்திலும் கூட
நிகழ்வின் முரணை முள்ளாய் வலிக்கச் செய்கிறது
நிகு நிறத்தில் எரியும் நிலவு.

திங்கள், 6 அக்டோபர், 2008

பால்ய நகரம்


மிக நேர்த்தியான சித்திரம் போல
மனவெளிகளில் மிதக்கிறது புராதன நகரமொன்று
கோட்டுச் சித்திரங்களினாலான மண்டபத்து அறைகளில்
உன் தைலங்களின் நறுமணத்தை பரவ விடுகிறாய்
கற்றூண்களின் முதுகுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறேன்
தேடி அணைத்துப் பருகுகிறாய்
உன்னில் பாதி வயதேயான
என் பால்யத்தை
மதில்களையும் தாண்டி பிரவாகமாகிறது
நட்சத்திரங்களை உருக்கிய நதி
களைந்தவைகளுக்கு காவல் வைத்த என் பற்றிய
பிரக்ஞையற்று அதில் குளிக்கிறாய்
நதிவடிய மேலேறி வரும் மேனிபட்டுத்
தெறிக்கும் கிரணங்களில் கண்கள் நடுங்குகின்றன
கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்
ஆறுதலாய்
குவிந்த சிப்பி போன்ற வெண்மார்புகளை
பந்துகளாக்கி விளையாட கொடுக்கிறாய்
என் பால்யத்தின் கடைசி நாட்களில்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

மழை நினைவுகள்


யுகம்யுகமாய் வெய்யில் படிந்துவிட்ட சுவர்கள்
மழையிறங்க ரகஸ்யமாய்ப் புகைகின்றன
உன் நினைவுகள் போல
கண்ணாடி சன்னலில் வழியும் சாரலென நீ
எனக்குள் இறங்கத் தொடங்கிய நாட்களின்
பழுப்புநிற பிம்பங்கள் தேடியலைகிறது மனது
உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை
புழுக்கம் கசக்கிய இரவொன்றில்
புவிஈர்ப்பு நியதிகளை உடைத்து
திசைகள் தீர்மானிக்கப்படாத பயணமாய்
மழையை அழைத்து வருவதாகவே சென்றாய்
இப்போதும் ஏதேதோ நிலையங்களில்
விரித்த குடையோடு கருங்கல் இருக்கைகளில் காத்திருக்கிறேன்
தொலைவில் அரூபமாய் நெளிந்து வருகிறது
நகருக்கும் நகருக்கும் மத்தியிலான உலகில்
கூரை தலையுரச நாம் ஸ்பரிசித்துக் கிடந்த
மழையில் நனைந்த அந்த ரயில்
.