ஞாயிறு, 5 அக்டோபர், 2008

மழை நினைவுகள்


யுகம்யுகமாய் வெய்யில் படிந்துவிட்ட சுவர்கள்
மழையிறங்க ரகஸ்யமாய்ப் புகைகின்றன
உன் நினைவுகள் போல
கண்ணாடி சன்னலில் வழியும் சாரலென நீ
எனக்குள் இறங்கத் தொடங்கிய நாட்களின்
பழுப்புநிற பிம்பங்கள் தேடியலைகிறது மனது
உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை
புழுக்கம் கசக்கிய இரவொன்றில்
புவிஈர்ப்பு நியதிகளை உடைத்து
திசைகள் தீர்மானிக்கப்படாத பயணமாய்
மழையை அழைத்து வருவதாகவே சென்றாய்
இப்போதும் ஏதேதோ நிலையங்களில்
விரித்த குடையோடு கருங்கல் இருக்கைகளில் காத்திருக்கிறேன்
தொலைவில் அரூபமாய் நெளிந்து வருகிறது
நகருக்கும் நகருக்கும் மத்தியிலான உலகில்
கூரை தலையுரச நாம் ஸ்பரிசித்துக் கிடந்த
மழையில் நனைந்த அந்த ரயில்
.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

Romba azagaana kavithai....liked very much... :))

//உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை//

Especially these lines..!! :))
Sorry tamil-la comment poda mudiyala :(

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

நன்றி ஸ்ரீ..தொடர்ந்து வலைப்பூ பக்கம் வரவும்..

M.Rishan Shareef சொன்னது…

மனதைக் கவர்ந்த மழைப்பொழுதுக் கவிதையொன்று.மழையில் நனைந்த ரயிலின் அனுபவம் எல்லோர்க்கும் இருக்கும் போலிருக்கிறது. கவிதை அருமை.

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

////மனதைக் கவர்ந்த மழைப்பொழுதுக் கவிதையொன்று.மழையில் நனைந்த ரயிலின் அனுபவம் எல்லோர்க்கும் இருக்கும் போலிருக்கிறது. கவிதை அருமை.////

நன்றி ரிஷான்..நீங்கள் சொன்னது போலவே word verification'ஐ நீக்கிவிட்டேன்..
அனுபவத்தின் தடத்தில் தானே கவிதை பயணிக்க முடியும்?இல்லையா..