வியாழன், 11 ஜூன், 2009

பாலைவனத் தனியன்விரிந்த கடல்
மணலான கதையின் நாயகன் அவன்
கோடையின் விளைவாக உமிழும்
வெயிலின் உக்ரத்தை உறிஞ்சுகிறான்
எல்லாத் திசையிலும் வளர்ந்து விரியும்
பாலைப் பரப்பின் மீது
உலர்ந்த நாசி நீர்ச்சுவடுகளை நுகர்ந்து தோற்கிறது
நிசப்தத்தைக் காட்டிலும் குறைந்த ஒலியில்
நினைவிற்குள்ளாக நுழைந்து சுவைக்கிறான்
முன்பறிந்த பெண்ணின்
பழுத்த உதடுகளை
பேரிட்சையின் தித்திப்பானது
தாகத்தை மேலும் கூட்டுகிறது
பாலைவனத் தனியன் நிலவழிந்த இரவில்
ஸர்ப்பத்தின் வாலை மிதித்துவிட்டான்
ஸர்ப்பமோ முன்காலத்தில் நதியாயிருந்தது
ஸர்ப்பமாகிவிட்ட நதியின் ரேகைகள் பதிந்த பாதத்தால்
மணல்வெளியெங்கும் எழுதித் திரிகிறான்
அதன் உடல்மொழியை
தனிமையின் ஊதாநிழல் கவிந்துவிட்ட ஆன்மாவில்
அவன் காதலி
பருக யத்தனிக்காத கடல்அலைகளென ஆர்ப்பரிக்கிறாள்
பிரிந்து சென்றவனின் பிம்பத்தை அவள்
தன் ஆடியில் ஒளித்து வைத்திருக்கிறாள்
ஆடை மாற்றும் சாக்கில்
தினமும் அதை சல்லாபிக்கிறாள்
வேட்கை பீறிடும் உடல் ஆடியின்
ரஸவெளியில் கரைகிறது
நெளியும் உருவிலிருந்து தோலுரித்து வெளியேறுகிறது
நீர் ஸர்ப்பம்.

3 கருத்துகள்:

Saravana Kumar MSK சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சி இந்த பக்கம் வந்து இருக்கீங்க!!
வாங்க.. வாங்க.

Saravana Kumar MSK சொன்னது…

கவிதை அட்டகாசம்..
இன்னாமா எழுதறீங்க....

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

நன்றி சரவணா..படப்பிடிப்பு வேலைகளில் சிக்கிக் கொள்வதால் வேறு எதற்கும் நேரம் கிடைப்பதில்லை..என்ன செய்வது?தொழில் ஆயிற்றே...!