புதன், 1 ஜூலை, 2009

அறைக் கூடு (அ) பறவை வாழுமிடம்


இருளின் திசையஞ்சி கூடடையும் பறவை
சடசடத்து உடைக்கிறது அறையின் நிசப்தத்தை
வெண்தாளின் சிதறிய எழுத்துக்களில்
களைப்புற்ற மெல்லிறகு அமர்கிறது
வெப்பம் உறைந்த கல்அறைக்குள்
விரியும்
அப்பறவையின் சுதந்திரம் அபரிமிதமானது
மேலும் என் பெயர்சொல்லி அழைக்க
கற்றுக்கொண்ட பின்பு
அப்பறவைக்கான
தானியங்கள் சேமிப்பதை அவசியமென உணர்கிறேன்
இம் மாலைக்கானவற்றைக் கொத்தித் தீர்ந்ததும்
அறை மூலையில் குவிந்த
சொற்கூட்டங்களை கிளறுகிறது
எவரும் கற்பனிக்காத படிமமொன்றை
அதன் வால்நுனியில் கட்டிவிடுகிறேன்
தொன்ம நினைவொன்றில் சிக்கி
மேற்கே நீரிலமிழும் அந்தியை நோக்கி
தூதென சுமந்து வெளியேறுகிறது
அக்கணமே
தாளில் கிடந்த மெல்லிறகு
அறையை மூடுகிறது மென்கருமை பேருருவாகி.