வெள்ளி, 18 செப்டம்பர், 2009

காமத்தின் படுகை


கனவின் பிரவாகம் என்றறியா
நதிஉடல்
அதிகாலையின் விழியில் சிவப்பாகிறது
சிறுசுழிப்பில் நதிகொணரும்
நுரைகளை
அவள் என்மீதிருந்து அள்ளுகிறாள்
விடாய் தீர்க்க்கும் உடல் அவள்
பருக வேண்டி இன்னும் சில்லிடுகிறது
காமத்தின் படுகையில் ஜெல்லிமீன்
கூட்டம்
மொய்க்கும் குறுகுறுப்பை
மயிர்க்கால்களில் உணர
நதிவிளிம்பில் நான்கு குமிழிகள்
உடைகின்றன
காலாகாலத்திற்கும் எஞ்சிய கேள்விகள்
முடிச்சுகள் சூட்சமங்கள் அதனதன்
புரிதலில்
ரகஸ்யமற்று ருசித்து ருசியேறிய
உடல் பரிமாற அவள் உண்கிறாள்
நதியின் ஆதிவாசல் கண்டு
அவள் யோனி பொருத்துகையில்
நியோண்டர்தால் சிவனின்
சடை நெகிழ்ந்து அவிழ்கிறது