வியாழன், 12 பிப்ரவரி, 2009

பிலாக்கணங்கள் நடுங்கும் வெளி


நிலவின்மையின் முழுமையை உணரும் இரவில்
துர்கனவின் சல்லடையினூடே கசிகிறது
பேராபத்து
கட்டிட வனத்தைச் சுற்றிலும்
பிலாக்கணங்கள் நடுங்கும் வெளியில்
ஒப்பற்ற உன் வருகையின்
திருநிமிடங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
உலர்வானமாய் வெறித்துவிட்டன நம்பிக்கைகள்
இருள் வரிந்த கல்சுவர்களுள்
மௌனமென்று அறிய ஏதுமில்லை
ஊளையிடும் புகையும்
பெருவெடிப்பின் ஓசையுமென மாறும் காட்சிகளால்
வியர்க்கும் உள்ளங்கைகளை மறைத்துக் கொள்கிறேன்
காத்திருப்பின் யுகாந்திர நீட்சிக்குப் பின்
சூர்ய கோளத்தின் ஒரு துளியென எரிந்தணைந்த
உனதுடலைத் தருகின்றனர்
ஆயிரம்முறைகள் வாழநேர்ந்த இரவு உதிரும்போது
விடிகாலைக் கடலின் பாதமுணரும் அலைகள்
உன்னைப் போலவே திரும்பி விட்டன
மீளமுடியாமைக்கு

கருத்துகள் இல்லை: